CRIME
விருதுநகரில் கொடூரம்..! மது குடித்துவிட்டுத் தகராறு செய்த கணவன்.. வீட்டோடு வைத்து எரித்துக் கொன்ற இளம்பெண்..!!
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர்குரு (35). இவருடைய மனைவி சங்கரேசுவரி (31). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சங்கர்குரு மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் குடும்பத்தினரின் அறிவுறுத்தலின்பேரில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்த சங்கர்குருவுக்கும், சங்கரேசுவரிக்கும் இடையே நேற்று அதிகாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கரேசுவரி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து கணவர் சங்கர்குரு மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீயில் கருகி வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த சங்கர்குரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் தீ வீடு முழுவதும் பரவி அருகில் இருந்த மற்றுமொரு குடிசை வீடும் சேதமடைந்தது. இதுகுறித்துத் தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை அணைத்து, சங்கர்குருவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கணவனை எரித்துக் கொன்ற சங்கரேசுவரி காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
