LATEST NEWS
ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு பாக்கெட்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்..!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்குத் தலா 2 கிலோ கோதுமை மாவைப் பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதிலாக கோதுமையை பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மாதம் 10 கிலோ கோதுமையும், மற்ற பகுதிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதால், ஏழை எளிய மக்கள் கோதுமை மாவை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், பலர் இரவு உணவில் அரிசி சாதத்திற்குப் பதிலாகச் சப்பாத்தியை விரும்பிச் சாப்பிடுவதைக் கருத்தில்கொண்டு, ரேஷன் கடைகளிலேயே கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் கோதுமையை, தனியார் மாவு ஆலைகள் மூலம் அரைத்து பாக்கெட்டுகளில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்படி பொதுமக்களுக்குத் தலா 2 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.15 என்ற குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
