CINEMA
“எங்களை ஞாபகம் இருக்கா உனக்கு..?” சக போட்டியாளரை காதலித்த பெண்.. நேரலையில் மகளை கண்டித்து வெளியேறச் சொன்ன பெற்றோர்..! வைரலாகும் பிக்பாஸின் பரபரப்பு புரோமோ..!!
தமிழைப் போல, மலையாளத்திலும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 8வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலையாள பிக்பாஸின் இந்த வாரத்திற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான இன்ஃப்ளூயன்சர் நேஹா பாத்திமா, தனது சக போட்டியாளரான தாஷி ராஜ் என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு தனது பெற்றோரின் சம்மதத்துடன் உறவைத் தொடர விரும்புவதாகவும் அவர் கூறியிருந்த நிலையில், இவர்களின் இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளானது.
இதையடுத்து, போட்டியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வழக்கமான ‘குடும்ப வாரத்திற்கு’ முன்பாகவே, நேஹாவின் பெற்றோர் நேஹாவை அவசரமாகச் சந்தித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறக் கேட்டு கொண்டுள்ளனர். புரோமோவில் நேஹாவின் தந்தை, “நேஹா, உனக்கு எங்களை நினைவிருக்கிறதா? உனக்கு நினைவில் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை” என்று கண்டிக்கும் வகையில் பேசியுள்ளார். தொடர்ந்து அழுதுகொண்டே பேசிய நேஹாவின் தாய், மற்றவர்கள் உன்னை அவர்களின் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், நூறு சதவிகித வலியை தாங்கள்தான் உணர்கிறோம் கூறி வேதனை தெரிவித்துள்ளார்.
தாஷி ராஜ் மற்றொரு பெண் போட்டியாளருடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து நேஹாவுக்கும் தாஷிக்கும் இடையே இந்த காதலுக்கான உரையாடல் நடந்தது குறிப்பிடத்தக்கது. தாஷி ராஜ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், நேஹா பாத்திமா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் நேரில் வந்து கண்டித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறுமாறு அழைத்துள்ள இந்தச் சம்பவம் தற்போது மலையாள பிக்பாஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
