LATEST NEWS
“முதல்வர் விஜய் எதையுமே கண்டுக்கிறது இல்ல” தவெகவில் வெடித்த கோஷ்டிப் பூசல்.. தொண்டர்கள் பயங்கர அதிருப்தி..!!
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மைக்காலமாக உட்கட்சிப் பிரச்சினைகளும் கோஷ்டிப் பூசல்களும் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் இதனைப் பெருமளவில் கண்டுகொள்வதில்லை என அக்கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இடையே நிலவும் இந்த மோதல் போக்கு, அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் சோர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
தினமும் அரசுப் பணிகளுக்காகக் கோட்டைக்குச் செல்லும் முதல்வர் விஜய், கட்சியின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக வாரத்தில் ஒருமுறையாவது பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தொண்டர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பனையூர் அலுவலகத்திற்குத் தலைவர் வராததால், தங்களின் குமுறல்களை அவரிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடியாமல் நிர்வாகிகள் தவித்து வருவதாகவும், இதனால் கட்சிப் பணிகள் தொய்வடையும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கட்சியின் ஆரம்பக்கால தூண்களாக விளங்கும் மக்கள் இயக்கத்தினர் ஒருபுறமும், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து இணைந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் மறுபுறமும் என இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் தீவிரமான உட்கட்சி மோதல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளை முதல்வர் விஜய் உடனடியாகத் தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும், தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் தவெகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
