CRIME
“உன் பொண்டாட்டி நடத்தை சரியில்லடா..” நண்பர்கள் ஏற்றிய போதை: நள்ளிரவில் 3-வது மனைவியை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டிக்கொ*ற கணவன்..!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, நண்பர்கள் கூறிய பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த 3-வது கணவர், நள்ளிரவில் தனது மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த 24 வயது சுவேதா என்பவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட சுவேதாவிற்கு இதற்கு முன்பு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 28 வயது அஜித்குமார் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு எரியோடு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று அஜித்குமார் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அவரது நண்பர்கள், சுவேதாவின் நடத்தை சரியில்லை என்று அவதூறாகக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் நள்ளிரவில் வீடு திரும்பி, சுவேதாவிடம் விடிய விடியக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அஜித்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுவேதாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சுவேதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த எரியோடு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
