CRIME
“அடப்பாவி.. மனிதாபிமானமே இல்லையா..?” காதலி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இப்படியா செய்வது..? வாயில்லா ஜீவன்களைப் பழிவாங்கிய கொடூரக் காதலன்..! பகீர் பின்னணி..!!
கொல்கத்தாவின் விக்ரம்நகர் பகுதியில் மிக அதிர்ச்சிகரமான விலங்கு வதைத் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு வசிக்கும் நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியுடன் ஏற்பட்ட முறிவுக்குப் பழிவாங்கும் நோக்கில், அவளது இரண்டு வளர்ப்பு நாய்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தீப் பட்டாச்சார்யா என அடையாளம் காணப்பட்ட இந்த நபர், அப்பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் தனது காதலியுடன் வசித்து வந்துள்ளார். டிஜே-ஆகப் பணிபுரியும் அந்தப் பெண், சமீபத்தில் அவர்களது உறவை முறித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியபோது, தனது இரண்டு வளர்ப்பு நாய்களையும் அவரிடமே பராமரிப்புக்காக விட்டுச் சென்றுள்ளார்.
பெண் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதனால் ஆத்திரமடைந்த பட்டாச்சார்யா, கடந்த சனிக்கிழமையன்று அந்தப் பிராணிகள் மீது தனது கோபத்தைக் காட்டியுள்ளார். அவர் அப்பெண்ணுக்கு வீடியோ கால் செய்து, தனது நாய்களில் ஒன்றை எப்படி தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என்பதைக் காட்டியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்புகொண்டு அப்பார்ட்மெண்டுக்குச் சென்று விலங்குகளைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டார். அந்த நபரும் சில உள்ளூர் மக்களும் பிளாட்டுக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு நாய்களும் இறந்து கிடந்தன. ஒரு நாய் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது, மற்றொரு சிறிய நாய்க்குட்டியின் தலை செங்கல்லால் நசுக்கப்பட்டிருந்ததுடன், அப்பார்ட்மெண்ட் தரை முழுவதும் இரத்தம் சிதறிக்கிடந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும், நடிகையும் விலங்கு நல ஆர்வலருமான தெப்லினா தத் மற்றும் விலங்கு நல அமைப்புகளின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஜாதவ்பூர் காவல்துறையினர் அந்த அப்பார்ட்மெண்டுக்கு வந்து சந்தீப் பட்டாச்சார்யாவைக் கைது செய்து காவலில் எடுத்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
