CINEMA
தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை.. சின்னத்திரை நடிகரும், பாஜக நிர்வாகியுமான ரவி மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
சின்னத்திரை நடிகரும், பாஜக நிர்வாகியுமான ரவி மீது பெண் தொகுப்பாளினி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றிற்குச் சென்றபோது தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் தொகுப்பாளினி குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் சின்னத்திரை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளிப்பதற்காக ரவி அங்கு சென்றுள்ளார். நேர்காணல் நிறைவடைந்த பிறகு, அங்கிருந்த பெண் தொகுப்பாளினியிடம் அவர் எல்லை மீறி அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தத் தொகுப்பாளினி, தனக்கு நேர்ந்த அவமரியாதை குறித்து சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்தார்.
தொகுப்பாளினி அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரவி மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
