CRIME
“சாலையின் குறுக்கே வந்த மாட்டால் ஏற்பட்ட விபரீதம்..” 30 பயணிகளுடன் சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்த தனியார் பேருந்து.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற தனியார் பேருந்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தும்கூரு மாவட்டம் கொரடகெரே தாலுகாவில் உள்ள தும்பாடி பெட்ரோல் பங்க் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாவகடாவிலிருந்து தும்கூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்திற்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்ததால், முன்னால் சென்ற கார் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்துள்ளார். இதற்கிடையே, பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னால் நின்ற கார் மீது மோதும் சூழல் உருவானது. விபத்தைத் தவிர்க்கப் பேருந்து ஓட்டுநர் வாகனத்தைத் திருப்பியபோது, பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி அருகிலிருந்த பள்ளத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்தது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமின்றி அனைவரும் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினர்; இருப்பினும் சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. கொரடகெரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்தப் பதைபதைக்க வைக்கும் விபத்துக் காட்சிகள் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன.
