CRIME
“அப்பா ஐ.சி.யூ-வில் நலமாக இருக்கிறார்…” மகளின் திருமணத்தில் நடமாடிய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. பொய் சொல்லித் திருமணத்தை நடத்தி முடித்த மகன்.. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சோகம்…!!
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டத்தில், தனது மகளின் திருமணக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயப்பூரைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர், தனது மகளின் திருமணத்திற்கு முந்தைய சடங்கான ‘பிந்தோரி’ ஊர்வலத்தில் உறவினர்களுடன் இணைந்து மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாகப் பதறிப்போன குடும்பத்தினர் அவரை ரிஷப்தேவ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக உதயப்பூரில் உள்ள எம்.பி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்றடைந்ததும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சங்கர்லால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தந்தையின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போன அவரது மகன் மற்றும் உறவினர்கள், மகளின் திருமணம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கனத்த முடிவை எடுத்தனர். சங்கர்லாலின் உடலை மருத்துவமனைப் பிணவறையில் வைத்த குடும்பத்தினர், இந்தத் துயரச் செய்தியை மணமகளிடமும் அவரது தாயிடமும் மறைத்தனர். “அப்பா தற்போது ஐ.சி.யூ பிரிவில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார், அவரால் இப்போது பேச முடியாத நிலை உள்ளது” என்று மகன் தனது தாயிடமும் தங்கையிடமும் கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினார்.
அடுத்த நாள் மதியம் நடைபெறவிருந்த திருமணச் சடங்குகளை, அன்று இரவே அவசரமாக நடத்தி முடிக்கக் குடும்பத்தினர் தீர்மானித்தனர். அதன்படி, மணமகன் வீட்டாரை இரவோடு இரவாக வரவழைத்து, சம்பிரதாயப்படி திருமணச் சடங்குகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு மகள் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார். மகளின் திருமணம் நல்லபடியாக முடிந்து அவர் விடைபெற்ற பிறகே, தந்தை சங்கர்லால் உயிரிழந்த துயரச் செய்தி வெளியிடப்பட்டு, கண்ணீர் மல்க அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
