LATEST NEWS
அட இப்படியெல்லாமா பண்ணுவீங்க? “எனக்கு நீங்க ஒட்டு போடல” தேர்தலில் தோத்த கடுப்புல தெருவிளக்குகளை கழட்டி போட்ட வேட்பாளர்… பெரும் பரபரப்பு..!!
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் பஞ்சாயத்து சமிதி தேர்தலுக்கு முன்பு பொருத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள், வேட்பாளர் தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே கழற்றி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிப்லு (Piplu) பஞ்சாயத்து சமிதியின் வார்டு எண் 2-ல் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பிரியங்கா ஷர்மா தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மின்சார வாரிய ஊழியர்கள் வாகனத்தில் வந்து அங்கிருந்த தெருவிளக்குகளை அகற்றியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாகக் கிராமம் மற்றும் குக்கிராமங்களில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது விளக்குகள் அகற்றப்பட்டதால் மீண்டும் கிராமம் இருளில் மூழ்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த விளக்குகள் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்ததால் அகற்றப்பட்டதாக மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஆனால், விளக்குகள் பொருத்தப்பட்டபோதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேர்தல் முடிவு வெளியான உடனேயே யாருடைய உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
