CRIME
“பெரியார் அறிவுலகம் மெகா புத்தக மோசடி: சிக்கிய மேலும் 2 பதிப்பகங்கள்.. டன் கணக்கில் ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறை..!!
கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை மேலும் இரண்டு பதிப்பகங்களுக்கு இடையிலான தொடர்புகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழக்கில் சிக்கிய ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ பதிப்பகங்களுடன், ‘சிக்மா பிரிண்ட்ஸ்’ மற்றும் ‘சிக்மா பப்ளிஷிங் சர்வீசஸ்’ ஆகிய நிறுவனங்களும் ஒரே முகவரியில் இருந்து செயல்பட்டு வருவது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பதிப்பாளர் மோகன், குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான புத்தகத் தலைப்புகளைப் பதிவு செய்ததாகவும், போலியான எழுத்தாளர் பெயர்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் கொண்ட புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு விநியோகித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வெளிப்படைத் தன்மைக் கொள்கைகளை மீறி, பரிந்துரைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சில புத்தகங்கள் கொள்முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் ர ரூ.1.74 கோடி அளவுக்கு அரசு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பதிப்பகங்களுக்கிடையேயான தொடர்பு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சர்ச்சைக்குரிய புத்தகங்களை நூலகங்களில் இருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
