LATEST NEWS
“பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா முதல்வர் விஜய்?” கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரத்தில், பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா என முதலமைச்சர் விஜய்க்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று அரசுத் தரப்பு கூறி வந்தது பொய் என்பது இன்றைய ஆங்கில நாளிதழ் செய்தியின் மூலம் அம்பலமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பே பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என உயர்நீதிமன்றத்திலேயே அரசு பொய் சொல்லியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் முதலமைச்சருக்குத் தெரியாமல் தலைமைச் செயலாளரால் மறைக்கப்பட்டதா அல்லது தெரிந்தும் எம்எல்ஏ-வையும் தனது அரசையும் காப்பாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றத்தை மறைக்கத் துணை போன தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக விடுப்பில் அனுப்ப வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-வை உடனே கைது செய்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
