LATEST NEWS
“தவெகவுக்கு ‘முரட்டு முட்டு’ கொடுக்கும் வைகோ”… அங்கு புரொடக்ஷன் ஆபிசர் வேலை பார்க்கிறாரா..? மேடையில் வச்சு செய்த காளியம்மாள்..!!
நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், தமிழக வெற்றிக் கழக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரியில் தண்ணீர் தர மறுத்து மேகதாது அணையைக் கட்டும் காங்கிரஸுக்கு தவெக 2 அமைச்சர் பதவிகளைக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேச வாடகைக்கு ஆட்களை அமர்த்தியுள்ளதாகவும், அதில் வைகோ மிகத் தீவிரமாக (‘முரட்டு முட்டு’) ஆதரவு கொடுத்து வருவதாகவும் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய காளியம்மாள், கலைஞரையே நேரடியாக எதிர்த்து அரசியல் செய்த வைகோவின் தற்போதைய நிலைமையை ‘அமைதிப்படை’ திரைப்படக் காட்சியுடன் ஒப்பிட்டுப் பேசினார். “என்னை விட யார் விஜய்க்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்?” என வைகோ பேசுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு காலத்தில் பெரும் தலைவராக இருந்த வைகோ, தற்போது அங்கு ஒரு ‘புரொடக்ஷன் ஆபிசர்’ போலவும், பாதுகாப்பு அதிகாரி போலவும் வேலை செய்து கொண்டிருப்பதாகக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
மேலும், வைகோ எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அனைத்தையும் காலி செய்துவிட்டுத்தான் வருவார் என விமர்சித்த காளியம்மாள், அவரால் தவெக ஆட்சியே கலைந்து விடும் எனக் கூறியுள்ளார். வைகோ உடனிருக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை என்றும், அவர் காசு வாங்காத ஒரு ‘துரந்தர்’ போலச் செயல்பட்டு அவர்களையே முடித்து விடுவார் என்றும் காளியம்மாள் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
