CRIME
“போலி ஜிஎஸ்டி அதிகரிகளின் மெகா நாடகம்”..ஹவாலா பயத்தை வைத்து ரூ.2.5 கோடி நகை அபேஸ்… நள்ளிரவில் அரங்கேறிய நூதன கொள்ளை…!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பார்க் தெரு பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் தங்கக் கட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன், முறைகேடாக ஹவாலா பணமும் கையாளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தெரிந்து கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று, இந்தக் கடையைக் குறிவைத்துத் திட்டமிட்டுக் கொள்ளையடிக்க முயன்றுள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை அதிகாலை சுமார் 1:30 மணியளவில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டம் விட்ட கொள்ளையர்கள், ஜிஎஸ்டி அதிகாரிகள் போல் வேடமிட்டு அந்த நகைக்கடைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் நகைக்கடை உரிமையாளரிடம் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து, தாங்கள் அரசு அமலாக்க அதிகாரிகள் என்பது போலத் தத்ரூபமாக நாடகமாடியுள்ளனர்.
ஏற்கனவே அந்த நகைக்கடையில் சட்டவிரோதமாக ஹவாலா பணம் கையாளப்பட்டு வந்ததால், வந்தவர்கள் போலி அதிகாரிகள் என்ற சந்தேகம் உரிமையாளருக்கு ஏற்படவில்லை. மாறாக, உண்மையான அதிகாரிகள்தான் சோதனைக்கு வந்துவிட்டார்களோ என்ற கடும் அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. உரிமையாளரின் இந்தப் பயத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், கடைக்குள் இருந்த நகைகளைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, சுமார் 1.9 கிலோ எடையுள்ள 128 தங்க வளையல்களைப் பறிமுதல் செய்வது போல் அபகரித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நகைக்கடை உரிமையாளர், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கவும், கொள்ளை போன சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்டுத் தரவும் கோரி காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
