CRIME
“சார், அவர் பாடமே நடத்துவதில்லை..!” உண்மையைச் சொன்ன 11 வயது மாணவன்.. SDM அதிகாரி சென்ற அடுத்த நொடியே ரத்தம் வர ககொடூரமாக தாக்கிய தலைமை ஆசிரியர்.. பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், பள்ளியின் அவலநிலை குறித்து அதிகாரியிடம் புகார் அளித்த 11 வயது மாணவனைத் தலைமை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கிப் பல்லை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசிடமிருந்து அதிக அளவில் சம்பளம் பெற்றுக்கொண்டு, மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்குப் பதிலாகப் பள்ளியில் செல்போனில் லூடோ விளையாடுவது மற்றும் ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில், துணை மாவட்ட ஆட்சியர் அந்தப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, 11 வயது மாணவன் சமர் ராஜ்புத், ஆசிரியர் பாடம் நடத்துவதில்லை என்றும் பள்ளியின் சீர்கேடுகள் குறித்தும் அதிகாரியிடம் தைரியமாகப் புகார் அளித்துள்ளார்.
துணை மாவட்ட ஆட்சியர் ஆய்வை முடித்துவிட்டுப் பள்ளியிலிருந்து சென்றவுடன், ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் விபின் சுக்லா அந்தச் சிறுவன் மீது தனது கோபத்தைக் காட்டியுள்ளார். அதிகாரியிடம் புகார் அளித்ததற்காகச் சிறுவனைக் கடுமையாகத் திட்டியதுடன், ஈவு இரக்கமின்றித் தாக்கியதில் மாணவன் சமர் ராஜ்புத்தின் பல் உடைந்து ரத்தம் கொட்டியது. பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே, உண்மையைச் சொன்ன மாணவனை இவ்வாறு கொடூரமாகத் தாக்கிய செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்த மாணவனின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பெருமளவில் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளிக்குப் படிக்க வரும் பிஞ்சுக் குழந்தையைப் பல்லை உடைக்கும் அளவிற்குத் தாக்கிய தலைமை ஆசிரியர் விபின் சுக்லா மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
