POLITICS
BREAKING: இந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தலே கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தொடரும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலியாக உள்ள இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி, திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதி இல்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும், கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளில் முந்தைய தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் வெற்றியை எதிர்த்தும், தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரியும் எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த மூன்று தொகுதிகளும் முழுமையான காலியிடங்களாகக் கருத முடியாது எனக் கூறி, வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தத் தடை விதித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
