CRIME
“அம்மாடியோ.. மாதச் சம்பளம் வெறும் ரூ.4,250.. ஆனா..” பஞ்சாயத்துத் தலைவர் வீட்டு ஸ்கார்பியோ காரில் நடந்த அதிரடி வேட்டை.. வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேசம் மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தில் உள்ள பர்கேடா உடா கிராம பஞ்சாயத்துத் தலைவர் பவானிசங்கர் மீனா என்பவரின் வீட்டிற்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.1.29 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஷாம்கர் காவல்துறையினர் நடத்திய இந்த அதிரடி சோதனையில், பதிவு எண் இல்லாத அந்த காரின் ரகசிய அறைகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன மெக்கானிக் ஒருவரின் உதவியோடு காரைச் சோதித்தபோது இந்த பெரும் தொகை வெளிச்சத்திற்கு வந்தது.
மாதச் சம்பளமாக வெறும் ரூ.4,250 மட்டுமே வாங்கும் ஒரு கிராம சர்பஞ்ச் வீட்டிற்குப் பின்னால் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்பஞ்ச் பவானிசங்கர் மீனா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இந்த அசுர அளவிலான பணம் யாருடையது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள சட்டவிரோத கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
