LATEST NEWS
தண்ணீர் வேண்டாம்.. கெமிக்கல் வேண்டாம்..! வெறும் “சவுண்ட்” வச்சே தீயை அணைக்கும் 17 வயது மாணவி.. உலகமே வியந்த கண்டுபிடிப்பு..!!
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ், தண்ணீர் அல்லது இரசாயனங்கள் எதையும் பயன்படுத்தாமல் வெறும் ஒலி அலைகளை மட்டுமே கொண்டு தீயை அணைக்கும் புதிய தொழில்நுட்பக் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான கண்டுபிடிப்புக்காக, அவருக்கு உயரிய தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுமையான கருவியில் 12 வோல்ட் பேட்டரி, அதிர்வெண் ஜெனரேட்டர் , ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள ஜெனரேட்டர் ஒரு வினாடிக்கு 30 டிஜிட்டல் அலைகளை உருவாக்கி, அவற்றை அதிவேக ஒலி அலைகளாக மாற்றி ஒரு வட்ட வடிவ குழாய் வழியாக வெளியேற்றுகிறது. இந்த அலைகள் சிறிய வளையங்களாக மாறி, தீ எரியும் பகுதியில் உள்ள ஆக்சிஜனை முற்றிலுமாக வெளியேற்றி நொடிப்பொழுதில் தீயை அணைக்கின்றன.
அமெரிக்க பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனம் மேற்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, தனது மாமாவின் ஊக்கத்தோடு ஓராண்டு காலம் உழைத்து இக்கருவியை வடிவமைத்ததாக ஏஞ்சலா தெரிவித்துள்ளார். எதிர்கால தீயணைப்புத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக, மெக்சிகோ நாட்டின் மாகாண மற்றும் தேசிய அளவிலும் இவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
