LATEST NEWS
விதியின் கொடூரம்..! ஒரே இரவில் நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த கேரளா பெண்.. ஆறு வாரத்தில் விபத்தில் பலியான வருங்கால கணவன் – நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற இளம் பெண், அடுத்தடுத்து சந்தித்த பெரும் துயரங்களும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களும் நெஞ்சை உலுக்குபவையாக உள்ளன. கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த 24 வயது ஸ்ருதிக்கும், அவரது சிறுவயது நண்பரான ஜென்சன் (27) என்பவருக்கும் கடந்த ஜூன் 2024-ல் நிச்சயதார்த்தம் முடிந்து, டிசம்பர் மாதம் திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2024 ஜூலை 30 அன்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர வயநாடு நிலச்சரிவு, ஸ்ருதியின் கிராமத்தையே ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்தது.
அச்சமயம் ஸ்ருதி கோழிக்கோட்டில் இருந்ததால் உயிர் தப்பினார், ஆனால் சூரல்மலையில் இருந்த அவரது தந்தை சிவண்ணா, தாய் சபிதா, தங்கை ஸ்ரேயா மற்றும் உறவினர்கள் 6 பேர் என ஒரே இரவில் ஸ்ருதி தனது குடும்பத்தினர் 9 பேரை இழந்தார். தாயின் உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலமே அடையாளம் காணப்பட்ட அந்தத் துயரமான நேரத்தில், “நான் அவளைத் தனிமையில் விடமாட்டேன், எப்போதும் என் இதயத்தோடு அணைத்துக் கொள்வேன்” என்று உறுதியளித்த ஜென்சன், ஸ்ருதிக்குத் துணையாக நின்று ஆறுதல் அளித்தார். ஆனால் விதியின் கொடூரமாக, நிலச்சரிவு நடந்து ஆறு வாரங்களே ஆன நிலையில், செப்டம்பர் 10 அன்று தாயின் கல்லறையைத் தரிசித்துவிட்டுத் திரும்பும்போது அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் ஸ்ருதி காயமடைந்த நிலையில், படுகாயமடைந்த ஜென்சன் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செப்டம்பர் 11 அன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அனைத்து உறவுகளையும், தனக்குத் துணையாக இருப்பதாக உறுதியளித்த காதலனையும் இழந்து தவித்த ஸ்ருதியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் கேரள அரசு அவருக்கு வருவாய்த்துறையில் எழுத்தர் (Clerk) பணியை வழங்கிப் பெருந்தன்மையோடு உதவியது.
