LATEST NEWS
என்னது..! ஒரு குழந்தை வளர்க்க ரூ.1.39 கோடியா?! பிஎம்டபிள்யூ காரோடு ஒப்பிட்ட இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்… இணையத்தில் வெடித்த விவாதம்..!!
இந்தியாவில் ஒரு குழந்தையை வளர்த்து 18 வயது வரை ஆளாக்குவதற்குச் சுமார் ரூ.1.39 கோடி வரை செலவாகும் என்று ‘விக்யாத்’ என்ற இன்ஸ்டாகிராம் கிரியேட்டர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தான் ஏன் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை எடுத்தேன் என்பதை விளக்கும் இந்த வீடியோவில், கர்ப்பகால மருத்துவச் செலவுகள் ரூ.3 லட்சம், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு ரூ.6லட்சம், உணவு ரூ.15 லட்சம், கல்வி ரூ.33 லட்சம், டியூஷன் ரூ.9 லட்சம், கூடுதல் அறைக்கான வீட்டு வாடகை ரூ.32.4 லட்சம் உட்பட அனைத்துச் செலவுகளையும் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தெரிவித்த ஒரு குறிப்பிட்ட ஒப்பீடுதான் இணையவாசிகளின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. குழந்தையை வளர்ப்பதற்குச் செலவிடும் இந்த தொகையைக் கொண்டு ஒரு சொகுசு காரான ‘பிஎம்டபிள்யூ எம்4 காம்படிஷன்’ காரையே வாங்கிவிடலாம் என்று அவர் ஒப்பிட்டுப் பேசினார். பெற்றோர் என்ற உணர்வையும் குழந்தை வளர்ப்பையும் வெறுமனே ஒரு நிதி பரிவர்த்தனையாகவும், காரின் விலையோடும் அவர் சுருக்கிப் பேசியது பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
இந்த வீடியோ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த நிதி கணக்கீட்டை ஆதரித்தாலும், பெரும்பாலானோர் குழந்தைகளை பணத்தின் மதிப்பைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது என்று சுட்டிக்காட்டுகின்றனர். குழந்தைப் பேறு தரும் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியையும் அன்பையும் எந்தவொரு சொகுசுப் பொருளாலும் ஈடுசெய்ய முடியாது என்று பெற்றோர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
