LATEST NEWS
BREAKING: திமுக எம்பி கல்யாணசுந்தரம் மீது வழக்குப் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன இயக்குநர் தேர்தல் மோதல் தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் 4 இயக்குநர் பதவிகளுக்கு இ-வோட்டிங் முறையில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யாமல் நேரடியாக அலுவலகத்தில் விண்ணப்பித்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் திமுக தரப்பைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், அன்பழகன், வேலப்பன் மற்றும் ரவிசந்திரன் ஆகிய 4 பேரும் மீண்டும் போட்டியிட்டு, 197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இ-வோட்டிங் முறையில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, தவெக மாநகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் நிதி நிறுவனத்தின் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, தவெக பெண் நிர்வாகியான ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில், திமுக எம்பி கல்யாணசுந்தரம் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய வேலப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தவெக மற்றும் திமுக வினரிடையே அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
