LATEST NEWS
“MLAவை மீறி என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க..?” 20,000 சதுர அடி நிலம் கேட்டு தராததால் பொதுமக்களை மிரட்டினாரா தவெக எம்.எல்.ஏ..? அதிரடி வீடியோ வைரல்..!!
“எம்எல்ஏவை மீறி என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க..” என்று சேலம் வடக்கு தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் பொதுமக்களை ஒருமையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களே ஆகும் நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் வரிசையில் இந்தச் சம்பவமும் இணைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் நில உரிமையாளர்கள் சிலர் கழிவுநீர் கால்வாயைச் சிமென்ட் தளம் அமைத்து மூடியபோது அங்கு வந்த எம்.எல்.ஏ இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய நில உரிமையாளர் செந்தில்குமார், தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் கடந்த 4 மாதங்களாகத் தன்னிடம் 20,000 சதுர அடி நிலம் கேட்டு வந்ததாகவும், அதனைத் தர மறுத்த ஆத்திரத்தில்தான் தனது ஆதரவாளர்களுடன் வந்து தங்களை மிரட்டிப் பிரச்சனை செய்வதாகவும் பகீர் புகாரைக் கிளப்பியுள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோவில், “இதை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும்? நான் எம்.எல்.ஏ. சொல்லற மரியாதைக்குச் செஞ்சா செய்யுங்க, இது யார் வீட்டு ரோடு? என்னை மீறிச் செய்யக் கூடாது” என்று சிவக்குமார் அதிகார அதிகாரத் தோரணையில் பேசுவது பதிவாகியுள்ளது.
நில உரிமையாளரின் இந்த பகீர் குற்றச்சாட்டை தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் முற்றிலுமாக மறுத்துள்ளார். தான் யாரிடமும் பணம் அல்லது நிலம் எதுவும் கேட்கவில்லை என்றும், சிமென்ட் தளத்தால் சாக்கடையை முழுமையாக மூடிவிட்டால் அடைப்பு எடுக்க முடியாது என்ற பொது நோக்கத்திற்காகவே அதிகாரிகளிடம் பேசி நியாயம் கேட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அனுமதி வாங்காமல் சிமென்ட் தளம் அமைத்தவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-வின் இந்த மிரட்டல் வீடியோ தற்போது சேலம் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
