LATEST NEWS
என் போட்டோவைப் போட்டு “அன்பிலுக்கு அப்புறம் வேலு”.. மனஉளைச்சலால் கொந்தளித்த முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு… ₹10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு அதிரடி வழக்கு..!!
தனது புகைப்படத்தைப் போட்டு “அன்பிலுக்கு அப்புறம் வேலு” என்ற தலைப்பில் தனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்படும் வகையில் ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக எ.வ. வேலு குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சதவீதம்கூட உண்மையில்லாத தகவல்களை வைத்துத் தனது அரசியல் நற்பெயருக்கும், பொது வாழ்க்கைக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அந்த இதழ் செயல்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறித்தும் ஆதாரமற்ற, அவதூறான கட்டுரையை வெளியிட்டதாகக் கூறி ஜூனியர் விகடன் ஆசிரியர், வெளியீட்டாளர் உள்ளிட்ட 12 பேருக்கு ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தன்னைக் குறிவைத்து “அன்பிலுக்கு அப்புறம் வேலு” எனத் தலைப்பிட்டுத் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக எ.வ. வேலு சாடியுள்ளார்.
இதனையடுத்து, தன்னைப் பற்றித் தவறான செய்தியைப் பரப்பிய ஜூனியர் விகடன் இதழுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளதாக எ.வ. வேலு அறிவித்துள்ளார். அந்த வழக்கில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கும் மானநஷ்ட ஈடாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இதழ் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
