LATEST NEWS
மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக உயிரிழந்த 15 வயது வீராங்கனை.. தாயின் நெஞ்சை உலுக்கும் பதிவு..!!
தாய்லாந்தின் சாசோங்சாவ் மாகாணம், பாங் நாம் ப்ரியாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற இளையோர் கோல்ஃப் போட்டியின் போது, 15 வயதான இளம் வீராங்கனை ‘நோங் ஏயா’ (Nong Aeya) மற்றும் 31 வயதான பெண் கேடி ( ஆகியோர் மீது எதிர்பாராத விதமாக பயங்கர மின்னல் தாக்கியது. பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மோசமான வானிலைக்கு மத்தியிலும் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்ட போது, 11-வது துளையின் அருகே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் நோங் ஏயாவின் இதயம் செயலிழந்து, சுயநினைவை இழந்த நிலையில், அங்கிருந்த மீட்புக் குழுவினர் அவருக்கு அவசர முதலுதவி (CPR) அளித்து பாங் நாம் ப்ரியாவ் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்த்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலத்த தீக்காயமடைந்த அந்த இளம் வீராங்கனையின் உயிர் பிரிந்தது. மின்னல் தாக்கியவுடன் அவரது இதயம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் துடிப்பதை நிறுத்தியிருந்தாலும், மியான்மரில் வேலை செய்து கொண்டிருந்த அவரது தந்தை விமானம் மூலம் தாய்லாந்து திரும்பி வந்து, தன் மகளுக்குக் கடைசி விடை கொடுக்கும் வரை, அந்தப் பெண் போராடித் தனது நல்மூச்சைத் தக்க வைத்திருந்தார். தந்தை வந்து விடைபெற்ற சில மணி நேரங்களிலேயே நோங் ஏயாவின் இதயம் முற்றிலும் செயலிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த ஆறாத்துயரத்தால் நிலைகுலைந்து போன அவரது தாய் சமூக வலைதளத்தில், “எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள், ஆனால் அது என் அன்பு மகளுக்கு மேலும் வேதனையைத் தரும் என்றால், நாங்கள் வேதனையுடன் அவளது கையை விடுவித்து, அவளை நிம்மதியாகப் போக அனுமதிக்கிறோம்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், “என் இதயம் முற்றிலும் நொறுங்கிப்போய்விட்டது, என்னால் யாருடைய அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று கூறி, தனது மகளின் உடலை இறுதிச் சடங்கிற்காகச் சொந்த ஊரான சோன்புரிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
