LATEST NEWS
தூத்துக்குடியில் பயங்கரம்..! முன்னாள் விசிக நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை – 4 தனிப்படைகள் அமைப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே சோட்டையன் தோப்பு பகுதியில், முன்னாள் விசிக நிர்வாகியான பாலமுருகன் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காய்கறி கடை நடத்தி வந்த இவர், இன்று காலை கடையைத் திறந்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போடச் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரை வழிமறித்துப் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த கொலையையும் சேர்த்து மொத்தம் 10 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.
