LATEST NEWS
“அய்யோ என் பையனை காணோமே…” அலறிய பெற்றோர்..! கிராமத்தையே பதறவைத்த 7 வயது சிறுவன்… புதர்க்காடு, பாழடைந்த வீடுகளில் தேடிய போலீசுக்கு காத்திருந்த ஷாக்..!!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், திடீரென காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால், பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற அச்சத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
புகாரைப் பெற்றவுடன் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த 30-க்கும் மேற்பட்ட போலீசாரைக் கொண்ட குழுவினர், கிராமம் முழுவதும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புதர்க்காடுகள், பாழடைந்த கட்டடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின் உதவியுடனும் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.
போலீசார் மற்றும் கிராம மக்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த நிலையில், சிறுவன் மாயமானதாகக் கூறப்பட்ட அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மறைவான பகுதியில், அச்சிறுவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் கடத்தப்படவில்லை, விளையாடச் சென்ற இடத்தில் அப்படியே தூங்கிவிட்டான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவனை காவல்துறையினர் அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
