LATEST NEWS
“நானும் செத்திருக்கணும்…” கண் முன்னே தாயை இழந்த மகனின் கதறல்..! துர்கா பூஜை பந்தலில் நடந்த கோர விபத்து..!!
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்வஜனீன் துர்கா பூஜை பந்தலில் நேற்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். இரவு சுமார் 7.40 மணியளவில் மழை பெய்ததால் வெளியே நின்றிருந்தவர்கள் பந்தலுக்குள் முண்டியடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த கூட்டநெரிசல் நிகழ்ந்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் சுயநினைவின்றி இருந்த பலர் இருசக்கர வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த கூட்டநெரிசலில் 25 வயது இளைஞர் சோனு பால் காயமின்றி தப்பினாலும், அவரது தாய் அவர் கண் முன்னே உயிரிழந்தார். மழையிலிருந்து தப்பிக்க அரங்கத்தின் நுழைவாயில் அருகே கூடியிருந்த மக்கள் திடீரென உள்ளே நுழைய முயன்றபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். “வெளியே மழை பெய்துகொண்டிருந்ததால் உள்ளே யாரும் வெளியே செல்ல விரும்பவில்லை. அதேநேரம் மழையிலிருந்து தப்பிப்பதற்காக, நுழைவாயிலுக்கு அருகே நின்றிருந்த மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர்” எனத் தெரிவித்த அவர், கூட்டம் அதிகரித்ததால் அனைவரும் கட்டுப்பாட்டை இழந்து ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும், தான் எப்படியோ தப்பித்து தன் அம்மாவிடம் சென்றபோது அவர் இறந்துவிட்டிருந்ததாகவும் சோனு பால் கூறினார்.
குறுகலான சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததுடன், அங்கு விளக்கு வசதியும் இல்லை மற்றும் பந்தலின் நுழைவாயிலும் வெளியேறும் வழியும் மிகவும் குறுகலாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மழையின் காரணமாக மக்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றிருந்த நிலையில், மழையால் பந்தலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பீதி ஏற்பட்டது. விளக்கு வசதி இல்லாததால் 2 சிறு குழந்தைகள் கீழே விழுந்ததையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பெரும் கூட்டம் அவர்கள் மீது விழுந்ததையும் நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் விவரித்தார். இந்த கூட்டநெரிசல் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட 7 பேர் இதுவரை கொல்கத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
