LATEST NEWS
“என் கார்… உன் வேலைக்காரன் அல்ல..!” காரில் சிகரெட் பிடித்த பயணியை நடுவழியில் இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுநர்..!!
சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், டாக்ஸி ஓட்டுநருக்கும் அதில் பயணித்த ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. காரில் பயணம் செய்த நபர், ஓட்டுநரின் அனுமதி பெறாமல் திடீரென சிகரெட் பற்ற வைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், “காரில் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லை; என்னிடம் கேட்காமல் ஏன் சிகரெட் பற்ற வைத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பயணி, “இது டாக்ஸி தானே, இதைத் தடுக்க நீங்கள் யார்? நான் தான் இதற்குப் பணம் கொடுக்கிறேனே” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
பயணியின் இந்தத் பொறுப்பற்ற பதிலால் கோபமடைந்த ஓட்டுநர், தொடர்ந்து அவருடன் விவாதிக்க விரும்பாமல் உடனடியாகப் பயணத்தை ரத்து செய்தார். மேலும், “எனக்கு உங்கள் பணம் தேவையில்லை, உடனடியாக எனது காரை விட்டு இறங்குங்கள்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒரு டாக்ஸி ஓட்டுநர், உங்கள் வேலைக்காரன் அல்ல” என்று தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் காரில் இருந்து அந்த நபரை இறக்கிவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான இணையவாசிகள், ஒரு சேவைக்காகப் பணம் செலுத்துவதால் மற்றவர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்தவோ அல்லது ஓட்டுநர்களை அவமதிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி ஓட்டுநரின் துணிச்சலான செயலைப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வீடியோ உண்மைதானா அல்லது வெறும் பார்வைகளைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு நடிக்கப்பட்ட வீடியோவா என்ற சந்தேகத்தையும் சிலர் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.
