LATEST NEWS
“US எங்கள அடிச்சா.. ஐரோப்பா காலி” கடலடி இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்… உலகிற்கு காத்திருக்கும் டிஜிட்டல் ஆபத்து..?
அமெரிக்கா தங்கள் மீது மீண்டும் போர் தொடுத்தால், அதற்கு ஆதரவாகச் செயல்படும் ஐரோப்பிய நாடுகளை ஈரான் சும்மா விடாது என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள பிரிட்டன் (UK), ஜெர்மனி, இத்தாலி மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஈரானின் நேரடித் தாக்குதல் வளையத்திற்குள் வரக்கூடும் என்று சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் மீண்டும் ஒரு போர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இராணுவ தளங்களை குறிவைப்பது மட்டுமின்றி, உலகளாவிய தகவல் தொடர்பை முடக்கும் வகையில் கடலுக்கு அடியில் செல்லும் முக்கியமான இணைய கேபிள்களையும் ஈரான் தாக்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஐரோப்பிய நாடுகள் வழியே செல்லும் இந்த டிஜிட்டல் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்த ஈரான் தயங்காது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது நடந்தால் சர்வதேச அளவில் இணைய சேவை மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
ஈரானின் இந்த அதிரடி எச்சரிக்கை மற்றும் உத்திகள் காரணமாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐரோப்பிய தேசங்கள் தங்களின் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு அமைப்புகளும், கடலடி கேபிள்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பங்களும் தற்போதைய சூழலில் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவேளை மோதல் வெடித்தால், அது உலகளாவிய பொருளாதார மற்றும் டிஜிட்டல் தளங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
