LATEST NEWS
“7.3 கிலோ உடல் எடை குறைந்தது.. உருகும் உடல்நிலை.. ஆனாலும் தளராத சோனம் வாங்சுக்.. அதிர வைக்கும் மருத்துவ அறிக்கை”..!!
தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” நடத்தி வரும் காலவரையற்ற தொடர் போராட்டம் 18-வது நாளை எட்டியுள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் லடாக் செயல்பாட்டாளருமான சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது உடல் எடை 7.3 கிலோ வரை குறைந்துள்ளது. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவு காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்த போதிலும், கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை தனது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் சோனம் வாங்சுக் உறுதியாக உள்ளார். இவருக்கு ஆதரவாக அகில இந்திய மாணவர் சங்க மாணவர்களும் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டக் களத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் தன்னார்வலர்களைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த காவல்துறையினரின் செயலுக்குக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தங்களது அமைப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காக அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். தேர்வு முறைகேடுகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அபிஜீத் தீப்கே, இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பிறகும் தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கப் பிரதமர் மோடி ஏன் இன்னும் தயங்குகிறார் என்றும், அவருக்கு அமைச்சர் ஏன் இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார் என்றும் முன்னதாகத் தனது சமூக வலைத்தளப் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
