LATEST NEWS
“ஆங்கிலம் ஒன்னும் அறிவல்ல”.. 18 பேர் பலியான போது எங்க போனீங்க?.. த.வெ.க அமைச்சர் கீர்த்தனாவின் முகத்திரையைக் கிழித்த சீமானின் பகீர் கேள்வி..!!!
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் இளம் தொழில்துறை அமைச்சரான எஸ். கீர்த்தனா, சிவகாசி திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடத்திய திடீர் ஆய்வின் போது பேசிய பேச்சுகள் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளன. ஆய்வின் போது மாணவிகளின் ஆங்கிலப் புலமையை சோதித்த அமைச்சர், ஒரு மாணவி திணறியதைத் தொடர்ந்து, "முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்" எனக் குறிப்பிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அக்குழந்தைக்குத் தன்னம்பிக்கையும் உத்வேகமும் அளிப்பதற்கு மாறாக, கூனிக் குறுக வைத்துத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் அமைச்சர் நடந்துகொண்டிருப்பது மலினமான விளம்பர அரசியலாகும் என்றும், தங்களது அரசியல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைப் பலிகடாவாக்கத் துடிக்கும் த.வெ.க அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது என்றும் அவர் சாடியுள்ளார்.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய அறிவல்ல எனும் அடிப்படை உண்மையை உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்ள ஆங்கிலமறியாத குழந்தையைக் குற்றப்படுத்துவதையும், கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் என்ற பொருளில் பேசியதையும் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார். அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்றும், முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கே அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?@CMOTamilnadu @TVKVijayHQ @Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா… pic.twitter.com/4DyCIh6dbP— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 7, 2026
மேலும், வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தாய்மொழி தமிழையே படிக்கத் தடுமாறி நின்றதைச் சுட்டிக்காட்டி, இந்த லட்சணத்தில் அமைச்சர்களை வைத்துக் கொண்டு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து கேள்வி கேட்பது உளவியல் வன்முறை என்று குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கும் நிலையில், தனக்குத் தொடர்பே இல்லாத பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சர், உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வடசென்னை பகுதிகளில் சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யாத அமைச்சர், விளம்பர மோகத்திற்காகப் பள்ளிகளில் குழந்தைகளிடம் அத்துமீறுவது வெட்கக்கேடானது என்று சாடியுள்ளார். எனவே, த.வெ.க அரசின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இத்தகைய மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
