LATEST NEWS
நான் ஒன்னும் கஞ்சா வியாபாரம் பண்ணல… முதல்ல ரூ.50 கோடி எப்படி இருக்கும்னு தெரியுமா.? தவெக எம்.எல்.ஏ புகாருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கிண்டல் பதில்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூர் காவல் நிலையத்தில் மூன்றாம் நாளாக இன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்று திட்டவட்டமாக மறுத்தார்.
தன்னை தவெக-விலிருந்து விலகி திமுக-வில் இணையச் சொல்லி, அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் ஒருவர் ₹50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு இணங்காததால் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் விஜி சரவணன் நேற்று பரபரப்பு புகாரை முன்வைத்திருந்தார். இந்த ₹50 கோடி ரூபாய் பேரம் குறித்த கேள்விக்கு கிண்டலாகப் பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், “யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம்; முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா, நீங்கள் வேண்டுமானால் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள்” என்று சாடினார்.
மேலும், “நான் ஒன்றும் லாட்டரி வியாபாரமோ, கஞ்சா வியாபாரமோ செய்யவில்லை. பழுத்த மரம்தான் கல்லடி படும்” என்று கூறிய அவர், லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கையில், ஒருவேளை லாரியை மடக்கி ₹300 மாமூல் கேட்டபோது ஏற்பட்ட கோபத்தில் அந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என விஜி சரவணனை மறைமுகமாகக் கிண்டல் செய்தார். இந்த விவகாரம் தற்போது தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
