LATEST NEWS
சவால் விட்டு சொல்றேன்..! 6 மாசத்துக்கு மேல இந்த ஆட்சி இருக்காது.. இருக்கவும் விட மாட்டோம்.. பரபரப்பை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!!
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான அரசியல் சவாலை முன்வைத்துள்ளார். “சவால் விட்டுச் சொல்கிறேன், 6 மாதத்திற்கு மேல் இந்த தவெக ஆட்சி இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்” என்று அவர் ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார். நேற்று வந்த கட்சிக்குத் தாங்கள் பயப்படத் தேவையில்லை என்றும், தன்னிடம் குதிரை பேரம் அல்ல, ஒட்டகப் பேரம் பேசினாலும் பலிக்காது என்றும் அவர் தவெக நிர்வாகிகளைச் சாடியுள்ளார்.
காவல்துறை விசாரணையின் போது தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வேண்டும் என்று காவல்துறையினர் தன்னை வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குத் தான் எவ்விதத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தங்களை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். காவல்துறை தன்னைத் தாக்க முயன்றால் திருப்பித் தாக்குவேன் என்று எச்சரித்த அவர், திமுகவில் தான் எப்போதும் வலுவாக இருப்பேன் என்றும், தலைவர் மு.க. ஸ்டாலின் கட்டளைப்படியே செயல்படுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் ஒருமையில் பேசியதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகும். தவெக நகரச் செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முதலமைச்சரை அவதூறாகப் பேசக்கூடாது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
