LATEST NEWS
“என்னப்பா இது கூத்து.. டிரஸ் மாத்துற மாதிரி.. மூக்கைக் கழற்றி மாட்டுறாங்களா..?” வைரலாகும் பிரிட்டன் பெண்ணின் பிரமிக்க வைக்கும் பின்னணி..!!
பிரிட்டனைச் சேர்ந்த ஜேன் ஹார்ட்மேன் என்ற பெண், ஆடைகளை மாற்றுவது போல தனது மூக்கையும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வித்தியாசமான வழக்கம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவர் ஒரு நோயெதிர்ப்பு சக்தி சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் இவரது இயற்கை மூக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன்பின்னர், செயற்கை மூக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கிய இவரிடம், தற்போது வெவ்வேறு தோலின் நிறத்திற்கு ஏற்ப பொருந்தக்கூடிய 10-க்கும் மேற்பட்ட செயற்கை மூக்குகள் உள்ளன. மது அருந்திய பிறகு முகம் மற்றும் மூக்கு சிவப்பாவதால், அப்போது பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக இளஞ்சிவப்பு நிற செயற்கை மூக்கையும் அவர் வைத்துள்ளார்.
இந்த செயற்கை மூக்குகள் இவரது முகத்தில் கழற்றி மாட்டும் வகையில் அமைப்பதற்கு, இவரது முகத்தில் மூன்று காந்தங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு காந்தம் இரண்டு புருவங்களுக்கு இடையிலும், மற்ற இரண்டு காந்தங்கள் முகத்தின் இரு பக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இக்காந்தங்களின் உதவியோடு செயற்கை மூக்கு முகத்தில் எளிதாக ஒட்டிக் கொள்கிறது. இந்த செயற்கை மூக்குகளால் தனக்கு எந்த அசௌகரியமும் இல்லை என்றும், சாதாரண மனிதர்களைப் போலவே தன்னாழும் மூச்சு விடவும் அனைத்து விதமான வாசனைகளையும் உணரவும் முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.
https://www.instagram.com/reel/DbIyLetNokh/?utm_source=ig_web_button_share_sheet
ஜேன் ஹார்ட்மேன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மக்கள் அவரது இந்த வாழ்க்கை முறை, காந்த மூக்கு இயங்கும் விதம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட நோய் குறித்து பல்வேறு கேள்விகளை கமெண்ட் பிரிவில் கேட்டு வருகின்றனர். இவரின் இந்தத் துணிச்சலான அணுகுமுறையையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அவர் பயன்படுத்தும் ‘பார்ட்டி நோஸ்’ எனும் செயற்கை மூக்கையும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
