LATEST NEWS
“டான்ஸ் ஆடுவோம்… காஃபி குடிப்போம்… போராட்டமும் பண்ணுவோம்..!நெட்டிசன்களின் விமர்சனமும்… சவுரவ் தாஸின் மரண மாஸ் பதிலடியும்..!!”
டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடந்து வந்த இளைஞர் அமைப்பான ‘காக்ரோச் ஜனதா கட்சியின்’ போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதன் உறுப்பினர்கள் டெல்லி நட்சத்திர விடுதி ஒன்றில் நடனமாடிக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்துப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலின் வடுக்கள் ஆறாத நிலையில், இதுபோன்று விடுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளப் பயனர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் கடுமையான விமர்சனங்களுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த சிஜேபி தலைவர் சவுரவ் தாஸ், தற்போதைய Gen Z இளைஞர்களின் போராட்ட வடிவத்தையும் மொழிநடையையும் முந்தைய தலைமுறையினராலும் ஊடகங்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சாடினார். “நாங்கள் வீதியில் இறங்கியும் போராடுவோம்; அதே நேரத்தில் நடனமாடிக் கொண்டும், காபி குடித்துக் கொண்டும் எங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம். பழைய தலைமுறையினர் எதிர்பார்ப்பது போல் தான் போராட்டம் இருக்க வேண்டும் என்பதில்லை; எங்களை யாராலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்க முடியாது. பழைய தலைமுறையினர் புலம்புவதைப் பற்றிப் கவலையில்லை” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் திரும்பப் பெறப்பட்டது, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்தே ஜூலை 26 அன்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும், “உண்மையிலேயே அடிவாங்கிய மாணவர்கள் ஒருபுறம் இருக்க, விடுதியில் கொண்டாடும் இவர்கள் போலி போராட்டக்காரர்கள்” என இணையத்தில் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மற்றொரு தரப்பினரோ போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடுவதில் தவறில்லை என ஆதரவு தெரிவித்து வருவதால் இணையத்தில் விவாதம் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது.
