LATEST NEWS
“நான் யார் தெரியுமா..? நான் தான் முதல் மனைவி…! மணப்பெண் முன்னே கணவனின் துரோகத்தை போட்டுடைத்த முதல் மனைவி..!!”
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சாகேரி சௌத்ரி திருமண மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியது. சாமன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சஹானா ஹசன் என்பவர், காவல்துறை அதிகாரிகளுடன் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். மணமகன் ஆசிஃப் முகமது தன்னை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டினார். சஹானாவின் கூற்றுப்படி, ஃபேஸ்புக் மூலம் பழகிய இவர்கள் 2022-ல் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
2024-ல் தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரச்சனை நீதிமன்றத்தை எட்டியது. தாம்பத்திய உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி சஹானா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, ஆசிஃப் இரண்டாவது திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதாக அண்டை வீட்டார மூலம் சஹானாவிற்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே காவல்துறையினருடன் அங்கு விரைந்த சஹானா, மேடையில் இருந்த மணப்பெண்ணிடம் “நான் யார் தெரியுமா? நான் தான் முதல் மனைவி. இன்னும் விவாகரத்து ஆகவில்லை, இதை நான் நடக்க விடமாட்டேன்” என்று விருந்தினர்கள் முன்னிலையில் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த காரசாரமான மோதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போல வைரலாகி வருகின்றன. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணமகன் ஆசிஃப் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இருப்பினும், அங்கிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சட்டப்பூர்வமான திருமண உறவு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
