LATEST NEWS
BREAKING: “மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை” – நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதிரடி விளக்கம்..!!
காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்குத் தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என்று 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எங்கும் கூறப்படவில்லை என மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக இப்பதிலை அளித்துள்ளார். காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தை மேற்கொள்வதற்கும் பிற மாநிலங்களின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இல்லை என்பதை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேவேளையில், மேகதாது அணை கட்டுவதற்காகக் கர்நாடக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையில் சில திருத்தங்களைக் கோரி அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்ட அறிக்கையானது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் முறையான ஒப்புதல்களைப் பெற்ற பின்னரே பரிசீலிக்கப்படும் என மத்திய நதிநீர் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மேகதாது திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதும் இந்த விளக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
