LATEST NEWS
பரபரப்பு..! பள்ளிக்கு ஸ்டைலாக முடிவெட்டி வந்தா “மொட்டையடிச்சி விடுங்க”… அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சால் வெடித்த பெரும் சர்ச்சை..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற அரசு பள்ளி விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாணவர்கள் சிகை அலங்காரம் மற்றும் உடை அணியும் முறை குறித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வழக்கமான முறையில் (பார்மல்) முடி திருத்தம் செய்து மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தவறான மற்றும் விசித்திரமான முறையில் சிகை அலங்காரம் செய்து வரக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், மாணவர்கள் தப்புத் தப்பாக முடிவெட்டி வந்தால் அவர்களுக்கு முதலில் மொட்டையடித்து விடுங்கள், அதில் தவறே இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மேடையிலேயே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், முட்டாங்காலுக்கு மேல் ‘ஸ்டைல்’ என்ற பெயரில் பேண்ட் அணிந்து வருவதையும், இத்தகைய நாகரிகத்தை பெற்றோர்கள் ஏன் அனுமதிக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஒருவருடைய உடை மற்றும் சிகை அலங்காரத்தை வைத்தே காவல் நிலையங்களில் கூட அவரது குணாதிசயத்தை முடிவு செய்யும் நிலை இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தங்களது சொந்த பிள்ளையாக நினைத்து, ஒரு தாயாக மட்டுமே இந்த எச்சரிக்கையை விடுப்பதாகக் கூறினார். மாணவர்கள் முறையற்ற தோற்றத்தால் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவதைத் தடுக்க கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் விருதுநகர் மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
