LATEST NEWS
என்னம்மா..! சொந்த தொகுதி காசு தவெக கோட்டைக்கா..? ராஜபாளையம் டூ சாத்தூர்… அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டு குளறுபடியால் வெடித்த பெரும் சர்ச்சை..!!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி, அண்மைக்காலமாகத் தொகுதி நிதி முறைகேடு, மிரட்டல் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளார். குறிப்பாக, ராஜபாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூ.2.11 கோடியில், தவெக வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதிக்குட்பட்ட மூன்று ஊராட்சிகளுக்குத் தவறாக ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர், பொதுமக்கள் மனுக்கள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தவறு தெரிந்ததும் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு சர்ச்சை மட்டுமின்றி, தவெக நிர்வாகி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான ஆடியோ விவகாரமும் அமைச்சருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்தத் தொகுதியான ராஜபாளையத்தில் தவெக நிர்வாகி நுழைந்தது தொடர்பாக ஆவேசமாகப் பேசும் அந்த ஆடியோவில், கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், அமைச்சர் தரப்போ இந்த ஆடியோ முற்றிலும் ஜோடிக்கப்பட்டது என்றும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபரால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது என்றும் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இவற்றுடன் அரசு விழாக்களில் புரோட்டோகால் சர்ச்சை, பிரபல ரவுடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியான விவகாரம் மற்றும் பொதுக் கிணற்றை அபகரித்ததாகச் சொந்த ஊர் மக்கள் சுமத்திய நில அபகரிப்புப் புகார்கள் என அடுத்தடுத்து அவர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் அவரது கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த விபத்தும், அண்மையில் வெளியான மற்றொரு ஆடியோவும் பரபரப்பைக் கூட்டின. இந்தத் தொடர் சர்ச்சைகள் குறித்துப் பேசியுள்ள அமைச்சர், சிலர் தவறான வீடியோக்களைக் காட்டித் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
