LATEST NEWS
“அமைச்சர் பதவியை காப்பாத்த மெகா ஸ்கெட்ச்..!” ராஜபாளையத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி காட்டும் பிரம்மாண்டம்.. 100-வது நாளில் வெடித்த மெகா சர்ச்சை..!!
தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வேளையில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் ராஜபாளையம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பிரம்மாண்டக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என மேடைதோறும் முழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களை மிஞ்சும் அளவிற்கு இத்தகைய ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் நகரம் முழுவதும், குறிப்பாக ரயில்வே பீடர் ரோடு வரையிலும் ஆயிரக்கணக்கான கொடிக் கம்பங்கள், மெகா சைஸ் பேனர்கள் மற்றும் கவர்ச்சிகரமான ஒலி-ஒளி அமைப்புகளுடன் ஜவஹர் மைதானமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குத் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது செல்வாக்கை முதலமைச்சர் மற்றும் உளவுத்துறைக்கு நிரூபிக்கவே இத்தனை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மைக்காலமாகப் பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ சர்ச்சைகளில் சிக்கி வரும் ஜெகதீஸ்வரி, விரைவில் வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஒரு பேச்சு பரவி வருகிறது. இதனால், தனக்குத் தொகுதியில் இருக்கும் அசைக்க முடியாத பலத்தைக் காட்டித் தலைமையின் முடிவை யோசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, ராஜபாளையத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் “ஆற்றல்மிகு ஆளுமையே” என்ற வாசகங்களுடன் மெகா பேனர்கள் வைக்கப்பட்டு இக்கூட்டம் நடத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஏறத்தாழ ரூ.10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் குறித்துத் தற்போது கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. எளிய பின்னணியைக் கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரியோ அல்லது தவெக உள்ளூர் நிர்வாகிகளோ பெரிய அளவில் பொதுமக்களிடம் வசூல் செய்யாத நிலையில், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற மர்மம் நீடிக்கிறது. ராஜபாளையம் நகராட்சி ஒப்பந்தத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு குறிப்பிட்ட பெரிய ஒப்பந்ததாரரும், நகராட்சியில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் அலுவலகம் அமைக்க முயலும் ஒரு தனியார் சிமெண்ட் நிறுவனமுமே இந்தப் பொதுக்கூட்டச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபுறம், அமைச்சர் கீர்த்தனாவின் சிவகாசி தொகுதியிலும் இதேபோல் பட்டாசு ஆலை அதிபர்களிடம் ஆயிரக்கணக்கில் நிதி வசூலிக்கப்பட்டு 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதால், “இதுதானா லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி?” என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
