LATEST NEWS
“ஊரில் விஜய் இல்லாத நேரம்..!”தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தவெக இறக்கப் போகும் வைட்டமின் ‘ப’.. அம்பலமான ரகசிய தகவல்..!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ள சூழலிலும் தவெக தரப்பில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அது விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் 100 நாட்களுக்கு மக்கள் வழங்கிய “பாஸ் மார்க்” ஆகக் கருதப்படும் என்பதால், ஆதவ் அர்ஜுனா குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் செலவினப் பட்டியலைத் தயார் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கையாண்ட பாணியைப் பின்பற்றி, ஒவ்வொரு 1000 வாக்காளர்களுக்கும் ஒரு குழுவை அமைத்து, இடைத்தேர்தல் களத்தில் அவசியமான வைட்டமின் “பணம்” விநியோகத்தை முறையாகக் கையாள்வது குறித்தும், கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைப்பது குறித்தும் தவெக அமைச்சர்களும் ஆலோசகர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர வேண்டாம் என அமைச்சர்கள் சிலர் கூறிய ஆலோசனையை நிராகரித்த விஜய், வராத பட்சத்தில் அதை எதிரிகள் “திமிர்” என எதிர்மறையாக விமர்சிப்பார்கள் என்ற ஆலோசகர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தலா ஒரு நாள் நேரில் சென்று ரோட் ஷோ அல்லது பொதுக்கூட்டம் வாயிலாக அதிரடிப் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வும், தவெக-வின் தேர்தல் பணிகளும் இடைத்தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முடிவுகள் தவெக ஆட்சிக்குக் கிடைக்கும் முதல் முக்கியமான மக்கள் மதிப்பீடாக அமையுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
