LATEST NEWS
“இனி வாழ்ந்து என்ன பயன்…” ஆசிய போட்டியில் இருந்து தூக்கப்பட்ட இந்திய வீராங்கனை… தற்கொலை வீடியோவால் உச்சகட்ட பரபரப்பு..!!
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ஜப்பான் புறப்பட்டு செல்லும் நிலையில், 18 வயதான இந்தியாவின் இளம் வுஷு வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியின் 60 கிலோ சாண்டா பிரிவில் நியாயமற்ற முறையில் கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டதாகவும், மாதக்கணக்கில் மனதளவில் துன்புறுத்தப்பட்டதாகவும், வாழ்வதில் இனி எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவியை தேர்வுக்கான போட்டியில் திவ்யான்ஷி வீழ்த்தியிருந்தபோதிலும் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வுஷு பெடரேசன் தரப்பில், திவ்யான்ஷிக்கு மருத்துவ ஆய்வின்போது ACL காயம் கண்டறியப்பட்டதாகவும், போட்டிக்கு தன்னை தயார்படுத்தும் வகையில் அவர் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திவ்யான்ஷியின் பயிற்சியாளர் அஷோக் கவுதம், ஆசிய போட்டியில் இருந்து நீக்குவதற்கு ஏற்ப அவரது காயம் மோசமான நிலையில் இல்லை என்றும், இரண்டு கால்களிலும் ACL காயம் ஏற்பட்டுள்ள ரோஷிபினாவை மட்டும் தேர்வு செய்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
