LATEST NEWS
விடுதி அறையில் நடந்த கொடூரம்…! சடலமாகக் கிடந்த காதலி… மயங்கிய காதலன்..! காதலன் மீது தாய் பரபரப்பு புகார்..!!!
கர்நாடக மாநிலம் சிக்வல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி ஹில்ஸ் அருகே உள்ள ஒரு தனியார் ஹோம்ஸ்டே விடுதி அறையில், பெங்களூரைச் சேர்ந்த 26 வயதான பிசியோதெரபிஸ்ட் சாய் சுரபி என்ற இளம் பெண் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்துள்ளார். அதே அறையில் அவருடைய காதலரான கேரளாவைச் சேர்ந்த முகமது சஞ்சீத் அலி என்பவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை காலையில் தங்கியிருந்த அறையை காலி செய்ய வேண்டிய நேரத்தில், அவர்கள் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுரபி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். அவரின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. மேலும், அவர் அருகில் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கிய நிலையில் கிடந்த சஞ்சீத் அலியை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த மரணம் குறித்து சுரபியின் தாயார் கீதா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சஞ்சீத் அலி தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவளுக்கு போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவரே தனது மகளைக் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நந்தி கிரிதாமா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட டைரி மற்றும் மாத்திரைகளை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். சஞ்சீத் அலி மயக்கம் தெளிந்து வாக்குமூலம் அளித்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
