LATEST NEWS
ஷாக்! நீங்களும் இதை செய்றீங்களா? மசாஜ் மெஷினை கண்களில் வைத்த இளைஞர்… விபரீத முடிவால் பறிபோக இருந்த பார்வை…!
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், தனது கண்களில் ஏற்பட்ட சோர்வைப் போக்குவதற்காக செய்த ஒரு விபரீதச் செயல் அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக திரைகளைப் பார்ப்பதால் கண்களில் ஏற்பட்ட கனம் மற்றும் வலியைக் குறைப்பதற்காக, பொதுவாக கடினமான தசைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதிர்வு தரும் ‘மசாஜ் துப்பாக்கியை’ தனது மூடிய கண்களின் மீது பயன்படுத்தியுள்ளார். சுமார் மூன்று மாதங்கள் வரை வாரம் தோறும் தொடர்ந்து இவ்வாறு செய்ததால், திடீரென அவரது வலது கண்ணில் இருண்ட புள்ளிகள் மற்றும் மின்னும் வெளிச்சம் தோன்றத் தொடங்கியதைக் கண்டு பதறியடித்துக்கொண்டு அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
இளைஞரைச் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்களின் உள்ளே ஏற்பட்டிருந்த மோசமான நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மசாஜ் இயந்திரத்தின் அதீத அழுத்தத்தால் அவரது வலது கண்ணின் விழித்திரை பல இடங்களில் கிழிந்து முழுமையாக இடம் பெயர்ந்திருந்ததோடு, இடது கண்ணில் ரத்தக்கசிவும் காயங்களும் ஏற்பட்டிருந்தன. நல்லவேளையாக உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையால் அவர் பார்வையிழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டார். மசாஜ் இயந்திரங்களை தோள்பட்டை, முதுகு போன்ற கடினமான தசைப் பகுதிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், கண்கள் போன்ற மிகவும் மென்மையான உறுப்புகளில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். கண்களில் சோர்வு ஏற்பட்டால் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுவதே சிறந்த முறையாகும்.
