LATEST NEWS
மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..! டெல்லி காவல்துறையின் கொடூர நடவடிக்கை அம்பலம்..? கண் பார்வையை இழந்த மாணவருடன்… ராகுல் காந்தி ஆவேசம்..!!
ஜூலை 20 அன்று டெல்லியில் சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் மற்றும் மத்தியப் படையினர் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைதியான முறையில் சென்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் மின்சார அதிர்ச்சி தரும் லத்திகளைப் பயன்படுத்தியும் கலைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பெல்லட் குண்டுகளால் காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என டெல்லி காவல்துறையும் மத்திய அரசின் PIB அமைப்பும் மறுத்துள்ளன.
கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தப்படும் உலோகம் அல்லது ரப்பரால் ஆன பெல்லட் குண்டுகள் உடலில் பாயும்போது கடுமையான காயங்களை ஏற்படுத்துவதுடன், கண் பார்வை பறிபோதல் மற்றும் சில நேரங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் மனித உரிமைகள் அமைப்புகள் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், போராட்டத்தின் போது பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு ஒரு பக்க கண் பார்வையை இழந்த சாஹில் என்ற 19 வயது மாணவரை உடன் வைத்துக்கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, தேசியக் கொடியை ஏந்தி அமைதியாகப் போராடிய மாணவர் மீது பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, பெல்லட் துப்பாக்கிகளே பயன்படுத்தப்படவில்லை என்ற அரசின் கூற்றைக் கடுமையாகச் சாடினார். மேலும், தேர்வு வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
