LATEST NEWS
“என் கார்… என் இஷ்டம்..!” நடுமழையில் பெண் பயணியை இறக்கிவிட்ட ரேபிடோ ஓட்டுநர்…! இன்ஸ்டாவில் வீடியோ போட்டு தூக்கிய பெண்… பின்னணியில் என்ன நடந்தது..?!
டேராடூனில் ரேபிடோ செயலியைப் பயன்படுத்திப் பயணித்த ஜான்வி சவுத்ரி என்ற பெண், செயலியின் வரைபடத்தில் இல்லாத மலையின் பின்புற பாதையில் செல்ல ஓட்டுநர் முயன்றதை எதிர்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதிலும், அந்த ஓட்டுநர் அப்பெண்ணை நடுவழியிலேயே வாகனத்தை விட்டு இறங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜான்வி கேள்வி கேட்டபோது, “இது என் கார், என் இஷ்டப்படிதான் செய்வேன்” என்று கூறி அந்த ஓட்டுநர் அவரிடம் ஆக்ரோஷமாகவும் அசிங்கமான வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.
இரவு நேரமாக இருந்ததாலும், திரும்பச் செல்ல பயணி கிடைக்க மாட்டார் என்பதாலும் ஓட்டுநருக்கு கூடுதல் பணம் தர ஜான்வி முன்வந்தும் அவர் ஏற்கவில்லை. பின்னர் நள்ளிரவு 10 மணியளவில் ஜான்வி பாதுகாப்பாக வீடு திரும்பினாலும், இச்சம்பவம் குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரேபிடோவில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பல பயனீட்டாளர்களும் ரேபிடோ செயலியில் தாங்கள் சந்தித்த இதுபோன்ற பாதுகாப்பற்ற கசப்பான அனுபவங்களை வெளிப்படுத்தி நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
https://www.instagram.com/reel/DbG5dv9ThAK/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ரேபிடோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் கண்ணியமுமே தங்களின் முக்கிய முன்னுரிமை என்றும், நடுவழியில் இறக்கிவிட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, ஜான்வியிடம் அவரது பயண விவரங்களை (Ride ID) அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
