LATEST NEWS
ரூ.1,500 லஞ்சத்துக்கு 2 ஆண்டு சிறையா…? 15 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செக்… லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி ஆக்ஷன்..!!
கடந்த 2009-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் சிக்கியது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆறுமுகத்தைக் கைது செய்யாமல் காவல் நிலையப் பிணையில் விடுவிப்பதற்காக, மணப்பாறை காவல் நிலையத்தில் அப்போதைய பெண் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றிய ராஜாத்தி என்பவர் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் திட்டப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஆறுமுகத்திடமிருந்து அக்டோபர் 30, 2009 அன்று ராஜாத்தி பெற்றபோது, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், முன்னாள் பெண் உதவி ஆய்வாளர் ராஜாத்தி மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.
