LATEST NEWS
பெரும் அதிர்ச்சி..! 26 மாணவர்கள் உடல் கருகி பலி.. 2 பள்ளிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் நேர்ந்த பயங்கரம்…!!
கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 26 மாணவர்கள் (19 மாணவிகள், 7 மாணவர்கள்) உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெற்கு கிவு மாகாண அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
ஒரு வீட்டில் தொடங்கிய தீ, அதனையொட்டி இருந்த இரண்டு பள்ளிகளுக்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. ஃபுராஹா மேல்நிலை பள்ளிக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், வெளியேறும் வழி குறுகலாக இருந்ததால் மாணவர்கள் ஜன்னல் வழியாகக் குதித்தும், கதவை நோக்கி ஓடியும் முண்டியடித்ததில் மிதிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இப்பகுதி அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகவும், பெரும்பாலான வீடுகள் மரத்தால் ஆனவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியானது ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, கனிம வளங்களைக் கைப்பற்றப் பல ஆயுதமேந்திய குழுக்கள் இங்குப் போட்டியிட்டு வருகின்றன. மேலும், வரலாற்றிலேயே மிகக் கொடிய எபோலா நோய்த்தொற்றுப் பரவலால் இப்பகுதி ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுகாதாரச் சேவைகள் பெரும் நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
