LATEST NEWS
“உங்க அப்பாவை விட அதிகம் உழைக்கணும் தம்பி” உதயநிதிக்கு சீனியர்கள் போட்ட கண்டிஷன்… ஆனால் நடப்பதோ… அறிவாலயத்தில் வெடித்த புகைச்சல்..!!
தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் அடுத்த தலைமையாக உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு ஏற்பட்டுள்ள சவாலான இந்தச் சூழலில், கட்சியின் எதிர்காலத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பு உதயநிதியிடம் இருப்பதாக உடன்பிறப்புகள் கருதுகின்றனர். இதனால், அறிவாலய வட்டாரத்தில் உதயநிதியைச் சுற்றியே தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதேவேளையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உதயநிதிக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உங்கள் தந்தையை விடவும் நீங்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும், வெறும் சென்னையை மட்டும் மையப்படுத்தாமல் தமிழகத்தின் மாவட்டவாரியாகத் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சீனியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்த இந்தத் தீவிர களப்பணி அவசியம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், சீனியர்களின் இந்த ஆலோசனைகளை உதயநிதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ‘அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனக் கூறி அலட்சியப்படுத்துவதாகவும் அறிவாலயத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. மூத்த தலைவர்களின் அனுபவபூர்வமான அறிவுரைகளை தள்ளிப்போடுவது, கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகங்களைப் பாதிக்குமோ என்ற கவலையும், விவாதமும் தற்பொழுது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலாக வெடித்துள்ளது.
