LATEST NEWS
“என் போட்டோ பெருசா இருக்கணும்” கறார் காட்டிய அமைச்சர் நிர்மல் குமார்…? மதுரையில் வெடித்த தவெக எம்.எல்.ஏ-க்களின் ஈகோ மோதல்.. பெரும் பரபரப்பு..!!
மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பலத்த உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக அடிக்கப்படும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் தனது புகைப்படத்தைப் பெரிதாகப் போட வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கறார் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி நிபந்தனை தவெகவின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் இந்த போஸ்டர் உத்தரவால், மதுரையின் முக்கிய தவெக எம்.எல்.ஏ-க்களான கல்லாணை, தங்கப்பாண்டி உள்ளிட்டோர் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாக அறிவாலய மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சராக இருக்கிறார் என்பதற்காகத் தங்களது சொந்த மாவட்டத்தில் தேவையற்ற அதிகாரங்களைச் செலுத்த வேண்டாம் என்று அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆரம்ப காலத்திலிருந்தே மதுரையில் இயக்கத்தை இரவு பகலாகக் கஷ்டப்பட்டு வளர்த்த தங்களுக்கே, அமைச்சர் இப்படி கட்டளையிடுவதா என்று அவர்கள் கட்சி மேலிட மட்டத்திலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தவெக ஆட்சி அமைந்த பிறகு, மதுரை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சருக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே புகைந்து கொண்டிருந்த இந்த ஈகோ மோதல், தற்போது போஸ்டர் விவகாரத்தால் பகிரங்கமாக வீதிக்கு வந்துள்ளது. மதுரையில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த இரு தரப்பும் மல்லுக்கட்டி வரும் இந்த உட்கட்சிப் பூசல், தவெகவின் தலைமைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதுடன், மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
